Monday, June 11, 2018

உலகக் கோப்பை 1983



1


25.06.1983!  இந்திய வரலாற்றில்  ஓர் இனிமையான நாள்!  அது நடந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது! ஆனால், அதை இப்போது நினைத்தாலும்  ஆனந்தமாக உள்ளது! ஒரு சாதாரண அணியாக  இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் அணி  உலகக் கோப்பையை வென்ற  சாம்பியன் அணியாக நாடு திரும்பியது! அதுவும் கிரிக்கெட் என்றாலே  எரிமலை, சூறாவளி, சுனாமி என்று வர்ணிக்கப்படும்  முதல் 2 உலகக் கோப்பையைகளை வாகை சூடிய  கிளைவ் லாய்டு, விவியன் ரிச்சர்ட்ஸ்,  கார்டன் கிரீன்விச், டஸ்மென் ஹெய்ன்ஸ், மைக்கேல் ஹோல்டிங், ஏண்டி ராபர்ட்ஸ்,  மார்ஸல், கோம்ஸ், டூ ஜான், கார்னர்  போன்ற மிகச் சிறந்த வீரர்களைக் கொண்ட  இமாலய அணியை இறுதிப் போட்டியில் வென்று  உலகக் கோப்பையைத் தட்டிப் பறித்து  இந்தியாவிற்கு மிகப் பெரிய கௌரவத்தை தந்தது! அத்தகைய மிகப்பெரிய சாதனையை  சாத்தியமாக்கிய மகாவல்லவர் யார் தெரியுமா? அவர்தான் கபில் தேவ்!!! கிரிக்கெட் உலகில் புயலாய் புகுந்தவர்! கிரிக்கெட் வரலாற்றைப் புரட்டிப் போட்டவர்! அவர் பந்துவீச்சு மின்னல் வெட்டு!  மட்டைவீச்சு இடிமுழக்கம்! அத்தகைய சாதனையாளருடன் கரங்கோத்த  இந்திய சாதனை மன்னன் சுனில் கவாஸ்கர்,  மொஹிந்தர் அமர்நாத், யெஸ்பால் சர்மா,  சந்திப் பட்டேல், ரோஜர் பின்னி, மதன்லால்,  ஸ்ரீகாந், கீர்த்தி ஆசாத், ரவி சாஸ்திரி, சாந்து,  வென்சர்க்கார், கிர்மானி எல்லாம்  ஒருங்கிணைந்து கூட்டாக சாதித்து  உலக கிரிக்கெட்டில் இந்தியாவின் பெயரை  பொன் எழுத்தால் பொறித்தார்கள்!  25 வருடங்களுக்குப் பிறகு, அதைப்பற்றி நான் ஏன் இப்போது பேசுகிறேன் என்று நீங்கள் நினைப்பீர்கள்! இந்திய வரலாற்றில்  மிகப் பெரிய சந்தோச நினைவாக பதிவாகியுள்ள,  கிரிக்கெட் உலகில் பொன் எழுத்தால் பொறிக்கப்பட்டுள்ள  அந்த அதிசய நிகழ்வை  எங்கள் தலைமுறையினர் நினைந்து நினைந்து மகிழ்வதற்கும்,  இளைய தலைமுறையினரும் நாளைய தலைமுறையினரும்  அறிந்து அனுபவித்து ஆனந்தப்படுவதற்கும்  இதை நான் இங்கு  மின் எழுத்தால் பொறிக்கிறேன்!
********************************************************************************************* 


2

1983ம் ஆண்டு  உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்  8 அணிகள் கலந்துகொண்டன.  உலகக் கோப்பையை இந்த முறையாவது  வென்றுவிட வேண்டுமென்ற ஆசை கனவோடு  மூன்றாவது முறையாக  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்திய இங்கிலாந்து  ஏ பிரிவில் முதன்மை அணி.  அதோடு பாகிஸ்தான், நியூஸ்லாந்து, இலங்கை களங்கண்டன.  ஹாட்ரிக் சாதனை படைக்கும் துடிப்பான வெறியோடு  மேற்கு இந்திய தீவுகள் அணி  பி பிரிவில் முதன்மை அணி.  அதோடு ஆஸ்திரேலியா, இந்தியா, ஜிம்பாப்பே களங்கண்டன.  போட்டிகள் 3 கட்டங்கள் கொண்டவை. முதல் கட்டம் நாக் அவுட் ஆட்டங்கள்; அடுத்து அரை இறுதி ஆட்டங்கள்; அதனை அடுத்து இறுதி ஆட்டம்.  நாக் அவுட் ஆட்டங்களில்  ஒவ்வொரு பிரிவிலும் உள்ள ஒவ்வொரு அணியும்  அந்தந்த பிரிவில் உள்ள அணிகளுடன்  இரண்டிரண்டு ஆட்டங்கள் விளையாட வேண்டும்.  அதாவது ஒவ்வொரு அணிக்கும்  6 ஆட்டங்கள் விளையாட வாய்ப்புள்ளது. ஒரு போட்டியில் வென்றால் 4 புள்ளிகள்.  அப்படி விளையாடும் போட்டிகளில்  அந்தந்த பிரிவில் அதிக புள்ளிகள் பெறும் முதல் 2 அணிகள்  அந்தந்த பிரிவில் அரை இறுதிக்கு தகுதி பெறும் அணிகளாகும்.  ஏ பிரிவில் முதல் இடத்தை பெறும் அணியும்  பி பிரிவில் இரண்டாம் இடத்தை பெறும் அணியும்  அதேபோன்று பி பிரிவில் முதல் இடத்தை பெறும் அணியும்  ஏ பிரிவில் இரண்டாம் இடத்தை பெறும் அணியும்  அரை இறுதியில் மோதும்.  மேற்படியான இரண்டு போட்டிகளிலும்  வெற்றி பெறும் அணிகள்  இறுதிக்கு தகுதி பெறும் அணிகளாகும்.  அன்றைய நாளில்  பொதுமக்களின் ஆர்வத்தை தூண்டிவிடும்  மீடியாக்கள் இல்லை.  அணி வெற்றி பெறுவதற்கான அதிர்ஷ்டத்தை பெறுவதற்காக  நாடுமுழுவதும் நடத்தப்படும்  பிராத்தனை, கையழுத்து இயக்கங்கள் இல்லை.  வாழ்த்துகின்ற திரை உலக நட்சட்திரங்கள் இல்லை.  தூக்கிப்புடிக்கின்ற ஸ்பான்சர் கம்பனிகள் இல்லை.  கோடிகோடியாக புரளும் பணமும் இல்லை.  இந்திய அணி பத்தோடு பதினொன்றாக  கலந்துகொள்ளும் ஒரு சாதாரண அணியாகத்தான் சென்றது.  அதுவரை நடந்திருந்த 2 உலகக் கோப்பை போட்டிகளில்  விளையாடிய 6 போட்டிகளில்  ஒரே ஒரு முறைமட்டும்  அதுவும் கத்துக்குட்டி கிழக்கு ஆப்பிரிக்காவை மட்டும்  இந்தியா வென்றிருந்தது.  இரண்டாவது உலகக் கோப்பை போட்டியில்  புதிய அணியாக வந்த இலங்கையிடம் தோற்று  பரிதாப அணியாக வெளியேறியது.  போட்டிகளில் கலந்துகொண்ட 8 அணிகளில்  ஜிம்பாப்பே, இலங்கைக்கு அடுத்த  மூன்றாவது பலவீன அணியாக இந்தியா கருதப்பட்டது.  இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு  66க்கு 1 என்ற அளவிற்கே கணிக்கப்பட்டது.  அந்தளவிற்கு நோஞ்சான் அணியாக சென்றிருந்த இந்தியா  அனுமன், அட்லஸ், ஹெர்குலிஸ் போன்ற  விஸ்பரூப பலசாலியான மேற்கு இந்திய தீவுகள் அணியை  முதல் போட்டியிலேயே எதிர் கொண்டது.  இந்திய அணிக்கு எப்படி இருந்து இருக்கும்!  இந்திய அணி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெல்லும் என்று  எவரும் நினைத்திருக்கமாட்டார்கள்.

உலகக் கோப்பையை இந்தியா வெற்றிகொள்ளும் என்று  எவரும் கனவு கண்டு இருக்கமாட்டார்கள். எந்த சோதிடருங்கூட கணித்திருக்கமாட்டார்.  ஆனால், இந்தியா வெல்லும் –  வெல்ல வேண்டும் என்ற கனவு,ஆர்வம், நம்பிக்கை, தீவிரம், வெறி  ஒருவரின் மனத்திற்குள் எரிமலையாக குமறிக்கொண்டிருந்தது.  சூறாவளியாக சுழன்று கொண்டிருந்துள்ளது.  அவர்தான் இந்திய அணியின் தலைவர்!  கபில்தேவ்!
********************************************************************************************* 


3
  

முதல் போட்டி-  9.6.1983-  மான்செஸ்டர் ஓல்டு டெர்ப்போடு மைதானம்-  வலுவான மேற்கு இந்திய தீவுகள் அணிக்கும்  பலவீன இந்திய அணிக்கும் இடையே! மேற்கு இந்திய தீவுகள் அணி டாஸில் வென்றது.  பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணியினர் முதலில் மட்டை பிடித்தனர். அதிக சதங்களையும், அதிக ரன்களையும் எடுத்த  இந்திய சாதனை மன்னர் சுனில் கவாஸ்கரும்  சற்று நேரம் களத்தில் நின்றாலும்  சுற்றி சுற்றி விளாசித் தள்ளும் ஸ்ரீகாந்தும்  துவக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர்.  மைக்கேல் ஹோல்டிங், ஏண்டி ராபர்ட்ஸ்,  மால்கம் மார்ஸல், கார்னர் என்ற  உலகின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை  மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு  இந்திய அணியினர் எதிர்கொண்டனர்.  சாதனை மன்னர் சுனில் கவாஸ்கரும்  புயல் வீரர் கபில்தேவும்  19, 6 என்ற சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.  ஆனால், யெஸ்பால் சர்மா 83, சந்தீப் பாட்டீல் 36 ரோஜர் பின்னி 27,  மொஹிந்தர் அமர்நாத், மதன்லால் தலா 21 ரன்கள் எடுத்ததில்  இந்தியா 60 ஓவரில் 262 க்கு 8 என்ற  கௌரவமான ஸ்கோரை எட்டியது.  அடுத்து மட்டை வீச களம் இறங்கியது  மேற்கு இந்திய தீவுகள் அணி.  மேற்கு இந்திய தீவுகள் அணி மட்டைவீச்சாளர்களை நினைத்தாலே  எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும்.  ஏனெனில், கிளைவ் லாய்டு, விவியன் ரிச்சர்ட்ஸ், கார்டன் கிரீன்விச், டஸ்மென் ஹெய்ன்ஸ், லாரி கோம்ஸ், டூ ஜான் எல்லாம்  அன்று உலகைக் கலக்கிய மட்டைவீச்சாளர்கள்! கபில்தேவ், மதன்லால், சாந்துவின்  வேகப்பந்து வீச்சு சரியாக எடுபடவில்லை.  ஆனால், ரோஜர் பின்னியும் ரவி சாஸ்திரியும் கலக்கினார்கள். ரோஜர் பின்னியின் வேகப்பந்து வீச்சில் 3 விக்கெட்களும்  ரவி சாஸ்திரியின் சுழற்பந்து வீச்சில் 3 விக்கெட்களும் சரிந்தன.  மேற்கு இந்திய தீவுகள் அணியின் சாம்பியன் ஆட்டக்காரர்கள்  அடுத்து அடுத்து குறிப்பிட்ட இடைவெளியில்  வரிசையாக வீழ்ந்து கொண்டிருந்தனர்.

கார்டன் கிரீன்விச் 24, டஸ்மென் ஹெய்ன்ஸ் 24,  விவியன் ரிச்சர்ட்ஸ் 17, பக்கஸ் 14, கிளைவ் லாய்டு 25,  டூ ஜான் 7 லாரி கோம்ஸ் 8 என சரிந்துவிட்டனர்.  உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தகூடிய விதத்தில்  சாம்பியன் அணி சாதா அணியிடம் தடுமாறியது.  263 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் 157க்கு 9 என்ற  பரிதாப நிலையில் நின்றது.  ஆனால், எப்படியும் வென்றுவிடும் என்ற  நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில்  10 ஆவது விக்கெட்டுக்கு ஏண்டி ராபர்ட்ஸும் கார்னரும்  கடுமையாக போராடினார்கள்.  ஆனால், இருவரும் தலா 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில்  ரவி சாஸ்திரியின் சுழற்பந்தை சையத் கிர்மானி பிடித்து  கார்னரின் விக்கெட்டை சாய்த்து  மேற்கு இந்திய தீவுகள் அணியின் நம்பிக்கையை முறியடித்தார்.  மேற்கு இந்திய தீவுகள் அணியின்  ஹாட்ரிக் கனவில் முதல் அடி வீழ்ந்தது.  228 ரன்களில் மேற்கு இந்திய தீவுகள் அணி சுருண்டது.  83 ரன்கள் எடுத்த யெஸ்பால் சர்மா ஆட்ட நாயகன் ஆனார்.  முதல் போட்டியிலேயே சாம்பியன் அணியை சாய்த்ததின் மூலம்  இந்திய அணியின் கண்களில் பட்டாம் பூச்சி பறந்தன.  முதன் முதலாக இந்தியர் மனதில்  நம்பிக்கை ஒளி பிறந்தது.  இந்திய கிரிக்கெட் ஆர்வலர்களின் நெஞ்சில்  ஆனந்தம் சிறகடித்தது.  இந்தியா சாதிக்கும், இந்தியா சாதிக்கும் என்று  எல்லா கடல்களும் ஆர்ப்பரித்தன.

********************************************************************************************

  4  


இரண்டாவது போட்டி! இந்தியா – ஜிம்பாப்பே அணியிடையே  11.6.1983 ல் லைசெஸ்டர் கிராஸ் ரோட்டில் நடந்தது.  முதல் போட்டியில் இந்தியா  மேற்கு இந்திய தீவுகள் அணியை கலக்கியதென்றால்  ஜிம்பாப்பே அதன் முதல் போட்டியில்  முதல் உலகக் கோப்பையில் ரன்னர் அணியான  ஆஸ்திரேலியாவை பந்தாடியது. ஜிம்பாப்பே உலகக் கோப்பை போட்டியில்  அப்போதுதான் முதல் முறையாக கலந்து கொண்டது.  முரட்டுதனமான கத்துகுட்டி அணியாக களம்கண்ட  ஜிம்பாப்பே முதல் போட்டியிலேயே  லில்லி, தாம்சன், வுட், வெஸ்ஸெல்ஸ்,ஹுயூஸ்,  ஹுக், பார்டர், யாலப், மார்ஸ், ஹாக், என்று  மிகப்பெரிய வீரர்களையெல்லாம் கொண்டிருந்த  ஆஸ்திரேலியாவையே பந்தாடிவிட்டு  இந்தியாவை தூக்கி சாப்பிட காத்திருந்தது.  இரண்டு அணிகளுமே சாதாரண அணியாக வந்திருந்தாலும்  முதல் போட்டியிலலேயே சாம்பியன் அணிகளை கதிகலங்க வைத்ததால்  அப்போட்டி பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. முதல் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியை  வென்ற தன்னம்பிக்கையில் இந்தியாவும்,  ஆஸ்திரேலியாவையே வென்ற தைரியத்தில் ஜிம்பாப்பேவும்  வீரவேசத்துடன் களம் கண்டன. ஆனால், முதலில் மட்டை வீசிய ஜிம்பாப்பே  இந்தியாவின் பந்துவீச்சில் அடங்கிபோனது.

 பேட்டர்சன் 22, ஹௌடன் 21, புட்சர்ட் 22 ஆகியோர் மட்டும்  20 ரன்களுக்கு மேல் எடுத்தனர்.  ஜிம்பாப்பே 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தன. மதன்லால் 3, ரோஜர் பின்னி 2,  கபில், சாந்து, ரவி தலா 1 விக்கெட்டுகளை சாய்த்தனர். ஜிம்பாப்பேயின் குறைந்த ரன்களை  இந்தியா 37.3 ஓவரிலேயே 5 விக்கெட்டு இழப்பிற்கு எடுத்து  5 விக்கெட்டு வித்தியாசத்தில் அபாரமாக வென்று  இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. சந்திப் பட்டேல் 50, மொஹிந்தர் அமர்னத் 44,  ஸ்ரீகாந் 20 ரன்களை எடுத்தனர்.  3 விக்கெட்டுகளை வீழ்த்திய மதன்லால்  ஆட்ட நாயகன் ஆனார்.  ஜிம்பாப்பேவை மிக எளிதாக வீழ்த்தியதின் மூலம்  உலககோப்பை வெற்றி கனவில் மிதந்தது.  ஆனால், அடுத்த அடுத்த ஆட்டங்கள்  இந்தியாவின் கனவை ஆட்டம் காண வைத்தன. ஆம். முதல் போட்டியில்  கத்துகுட்டி ஜிம்பாப்பேவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து  இரண்டாவது போட்டியில்  சாம்பியன் அணி மேற்கு இந்திய தீவுகள் அணியிடம்  படுதோல்வி அடைந்து  அடிபட்ட புலியாக உறுமிக்கொண்டு பாய்ந்து வந்த  ஆஸி அணி முழுபலத்தையும் காட்டி  இந்தியாவை சோக கடலுக்குள் தூக்கி வீசியது!   11.6.1983. நாட்டிங்ஹாம் டெர்ன்ட் பிரிட்ஜ் மைதானம்; ஆஸி டாஸ் வென்று மட்டை வீச்சை தேர்ந்தெடுத்து  இந்திய அணியின் 7 பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை தவுடு பொடியாக்கி  ஆஸி அணியினர் 9 விக்கெட்டு இழப்பிற்கு 320 ரன்கள் எடுத்தனர்.  முதல் விக்கெட்டை விரைவிலேயே கபில்தேவ் சாய்த்த போதிலும்,  இரண்டாவது விக்கெட்டுக்கு சேப்பபலும், ஹுயூஸும் 144 ரன்கள் குவித்தார்கள்.  சேப்பபல் 110, ஹுயூஸ் 52 யாலப் 66, பார்டர் 26ரன்களை விளாசி  இந்தியாவிற்கு மிகப்பெரிய ஸ்கோரை இலக்காக்கினர்.  கபில் 5, மதன்லால் 2 விக்கெட்டுகளை எடுத்த போதிலும்,  ஆஸியின் மிகப்பெரிய ஸ்கோரை கட்டுபடுத்த முடியவில்லை.  அடுத்து களமிறங்கிய இந்தியா  மெக்லே பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை எளிதாக பறிகொடுத்ததால்  158 ரன்களுக்கே 37.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தன.  கபில் தேவ் 40, ஸ்ரீகாந் 39, மதன்லால் 27 எடுத்த போதிலும்  மற்றவர்களெல்லாம் 20க்கும் குறைவான சொற்ப ரன்களிலேயே எடுத்தனர்.  ஆஸி அணி 162 ரன்கள் வித்தியாசத்தில்  மிகப்பெரிய வெற்றியை ஈட்டி  இழந்த பெருமையை மீட்டுக்கொண்டது.  அந்த போட்டியில் 110 ரன்கள் எடுத்த சேப்பல்  ஆட்ட நாயகன் ஆனார்.  முதல் 2 போட்டிகளில் வென்று  கோப்பை கனவில் மிதந்த இந்தியா  படுபாதாளத்தில் வீழ்ந்து பரிதவித்தது. மேற்கு இந்திய தீவுகள் அணியுடனான  அடுத்த போட்டியோ-  பட்ட காலிலேயே படும்  கெட்ட குடியே கெடும் என்பதுபோல்  இந்தியாவிற்கு ஆகிபோனது.

********************************************************************************************

  5  


இந்தியாவிற்கு 4 ஆவது போட்டி; தோல்வியில் துவண்டு போன் இந்தியா  ஏற்கனவே வெற்றி கண்ட மேற்கு இந்திய தீவுகள் அணியையே  எதிர் கொண்டதால் மீண்டும் எழமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்றிக்கொண்டு களம் கண்டது.  முதல் போட்டியில் எதிர்பாராவண்ணம் தோற்றுவிட்ட போதிலும், அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவை 101 ரன்கள் வித்தியாசத்திலும்,  ஜிம்பாப்பேவை 8 விக்கெட்டு வித்தியாசத்திலும் வீழ்த்தி  பெரும் வெற்றிகள் பெற்ற தெம்போடு  பழிக்கு பழி வாங்கும் வெறியோடு  மேற்கு இந்திய தீவுகள் அணி  களத்தில் குதித்தது. 15.6.1983-  இலண்டன் கிங்ஸ்டன் ஓவல் மைதானம்- மேற்கு இந்திய தீவுகள் அணி டாஸ் வென்று  மட்டை வீச்சை தேர்ந்தெடுத்தது.  முதல் விக்கெட்டை கபில்தேவ் விரைவிலேயே கைப்பற்றினார்.  ஜிம்பாப்பேவிற்கு எதிராக  105 ரன்களை எடுத்திருந்த கார்டன் கிரின்விச்  9 ரன்களுக்கே ஆட்டம் இழந்தார்.  ஆனால், 2 ஆவது விக்கெட்டுக்கு  ஹெய்ன்ஸும், விவியன் ரிச்சர்ட்ஸும் 101 ரன்களை எடுத்தனர். பிறகு விவியன் ரிச்சர்ட்ஸும் கிளைவ் லாய்டும் ஜோடி சேர்ந்து  ஆட்டத்தை கலக்கினர்.  3 ஆவது விக்கெட்டிற்கு 90 ரன்களை சேர்த்தனர்.  விவியன் ரிச்சர்ட்ஸ் 119, கிளைவ் லாய்டு 41,  ஹெய்ன்ஸ் 38, கோம்ஸ் 27 எடுத்ததில்  மேற்கு இந்திய தீவுகள் அணி  9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்களை குவித்தன.  ரோஜர் பின்னி 3 விக்கெட்டுகள் சாய்க்க  கபில்தேவ், சாந்து, அமர்நாத், மதன்லால் எல்லாம்  தலா 1 விக்கெட் வீழ்த்தினர். எப்படியாவது மேற்படி பெரிய ஸ்கோரை எட்டிப்பிடித்து  மேடேறிவிடவேண்டும் என்ற எண்ணத்தில்  மட்டைவீச்சை துவங்கிய இந்தியாவிற்கு  ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.  துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய  ஸ்ரீகாந் 2 ரன்னிலும் ரவி சாஸ்திரி 6 ரன்களிலும்  விக்கெட்டுகளை பறிகொடுத்து திரும்பிவிட்டனர்.  மொஹிந்தர் அமர்நாத் இந்தியாவை தூக்கி நிறுத்த போராடினார்.  80 ரன்கள் எடுத்தார்.  வென்சர்க்கார் 22, சந்தீப் பட்டேல் 21  கபில்தேவ் 36 ரன்களை எடுத்த போதும்  மேற்கு இந்திய தீவுகள் அணியின் 282 ரன்களை நெருங்க முடியவில்லை.

மைக்கேல் ஹோல்டிங் 3 விக்கெட்டுகளையும்  ஆண்டி ராபர்ட்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில்  2 ஆவது தோல்வியை தழுவியது.  119 ரன்கள் எடுத்த விவியன் ரிச்சர்ட்ஸ்  ஆட்ட நாயகன் ஆனார்.   அடுத்தடுத்த தோல்விகளால்  விமானத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட பயணியைப் போல்  இந்தியா வீழ்ந்து கிடந்தது.   ஜிம்பாப்பேயுடனான அடுத்த போட்டி இந்தியாவுக்கு வாழ்வா சாவா என்பதை  தீர்மானிக்கும் போட்டி;  ஏற்கனவே தோல்விகளால் துவண்டு போன இந்தியாவிற்கு  ஆரம்பத்திலேயே பலமான அடி வீழ்ந்தது.  ஆனால், அந்த போட்டியில் சாம்பலில் இருந்து  மீண்டு வரும் பீனிக்ஸ் பறவையைப் போல்  இந்தியாவின் கபில்தேவ் உலகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்த அற்புதத்தை நிகழ்த்தி  இந்தியாவை காப்பாற்றும் இரச்சகனாக விஸ்வரூப அவதாரம் எடுத்து  ஆடிய ருத்ர தாண்டவம்  கிரிக்கெட் வரலாற்றில் அதிஅற்புத நிகழ்வாக என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பது திண்ணம்!
*********************************************************************************************

6  

இந்தியாவின் 5 ஆவது போட்டி; 18.6.1983-  டண் பிரிட்ஜ் பெல்ஸ் நேவல் மைதானம்! ஜிம்பாப்பேவுடனான 2 ஆவது மோதல்! இந்தியா டாஸில் வென்று  மட்டை வீச தீர்மானித்தது; சுனில் கவாஸ்கர், ஸ்ரீகாந் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஜிம்பாப்வேயின் பந்துவீச்சு  இந்தியாவை சூறாவளியாக தாக்கியது.  ராவ்சன் பந்துவீச்சில் சாதனை மன்னர் சுனில் கவாஸ்கர்  ரன் எதுவும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.  இந்தியாவின் ஸ்கோர் 0 ரன்னுக்கு 1 விக்கெட்;  அடுத்து ஸ்ரீகாந்தும் ரன் எதுவும் எடுக்காமல்  குரன் பந்தில் டக்அவுட் ஆனார்.  இந்தியாவின் ஸ்கோர் 6 ரன்னுக்கு 2 விக்கெட்; துவக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றும் போதெல்லாம்  தாக்குபிடித்து விளையாடி  இந்தியாவை தூக்கி நிறுத்தும் மொஹிந்தர் அமர்நாத்,  சந்தீப் ப்ட்டேல், யெஸ்பால் சர்மா ஆகிய  நடுவரிசை ஆட்டக்காரர்களும் முறையே  5, 1, 9 ரன்களுக்கு ஆட்டம் இழந்து திரும்பிவிட்டனர்.  இந்தியா 17 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து  படு பரிதாபமாக நின்றது;  எற்கனவே இரண்டு தோல்விகள்! வாழ்வா சாவா என்கின்ற போராட்டம்! 17 ரன்களுக்கு 5 விக்கெட்! அப்பொழுது களம் புகுந்த கேப்டன் கபில்தேவிற்கு  எப்படி இருந்திருக்கும்? அவரின் உள்ளத்தில் கருக்கொண்டிருந்த  உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு,  ஆசை, ஆர்வம், வெறி, தன்னம்பிக்கை, தைரியம், திறமை, ஆற்றல் எல்லாம்  முக்கிய ஆட்டக்காரர்களெல்லாம் முக்கியமான ஆட்டத்தில்  சொற்ப ரன்களுக்கு சுருண்டு விட்டார்களே என்ற  ஆத்திரத்துடன் கலந்து ஆக்ரோசமாக்கி  அவரை சுழன்றடிக்கும் சூறாவளியாக்கியது! ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய கபில்,  ஆட்டத்தில் நிலைக்க நிலைக்க அதிரடி மன்னரானார்.  5 விக்கெட்டுகளை அற்பமாக பறித்த  ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு  பஞ்சு பஞ்சாகிப்போனது.  நான்கும் ஆறுமாக பந்துகள் பறந்தன. அரங்கத்தில் போட்டியை பார்த்தவர்களெல்லாம்  பிரமித்துப் போனார்கள். ஆட்டத்தைப் பார்த்தவர்களெல்லாம்  அதிசயத்து போனார்கள்! உதாசீனப்படுத்தி உளறித் திரிந்தவர்களெல்லாம்  உறைந்து போனார்கள்!  கபில்தேவின் கண்கொள்ளா ஆட்டத்தைக் கண்டவர்களெல்லாம்  கண்மூட மறந்தார்கள்! ஆம். 175 ரன்கள்! அதுவும் ஆட்டம் இழக்காமல்! 6 ஆறுகள் - 16 நான்குகள்! 100 ரன்கள் ஆறும் நான்குமாகவே எடுத்துவிட்டார்; 6 ஆவது விக்கெட்டுக்கு ரோஜர் பின்னியுடன் 60 ரன்கள்; 8 ஆவது விக்கெட்டுக்கு மதன்லாலுடன் 62 ரன்கள்; 9 ஆவது விக்கெட்டுக்கு சையத் ஹிர்மானியுடன் 126 ரன்கள்; 17 ரன்னுக்கு 5 விக்கெட்டுகள் என்று இருந்த  இந்தியாவை 266க்கு 8 விக்கெட் என்ற நிலைக்கு மட்டும் அல்ல –  அந்த ஆட்டத்தை வெல்வதற்கும் -  உலக கோப்பையை வெல்வதற்கும் கூட  இந்தியாவை தூக்கிக் கொண்டு சென்றுவிட்டார்  என்றுதான் சொல்லவேண்டும்!  இந்தியாவை வெல்ல இனி யாருமே இல்லை என்று  உலகமே உறுதி கொள்ளும் அளவிற்கு  அதல பாதாளத்தில் கிடந்த இந்தியாவை  நெடிய இமயத்தின் உச்சிக்கு  தூக்கிச் சென்றுவிட்டார் கபில்தேவ்!  அதுதான் கபில்தேவின்  மிக உயர்ந்த கனவு விளையாட்டாக இருக்க வேண்டும்! அந்த ஆட்டத்தில் கபில் தேவ்  அத்தகைய அபாரமான ஆட்டத்தை ஆடாமல் இருந்திருந்தால்  ஜிம்பாப்வே அணியை வென்றிருக்க முடியாது!  ஜிம்பாப்வே அணியை வெல்லாமல் இருந்திருந்தால்  அரையிறுதி போட்டிக்குகூட போயிருக்க முடியாது!  இந்தியாவின் உலகக்கோப்பைக் கனவு  அப்போதே தவுடு பொடியாகியிருக்கும்!


இந்தியர்களின் இன்ப நினைவாக இருக்கும்  அதிசயக்க வைத்த கபில்தேவின் விஸ்வரூப ஆட்டம்  விரும்பும் போதெல்லாம் கண்டு களிக்கும்வண்ணம்  ஒளிப்பதிவு செய்யாதது மிகப்பெரிய இழப்பு  என்றுதான் சொல்லவேண்டும்! அது ஒரு இழந்த சொர்க்கமாக  நினைக்கும் போதெல்லாம்  நெஞ்சை வறுத்திக்கொண்டுள்ளது! அந்த போட்டியில் கபில்தேவ்விற்கு அல்லாமல்  வேறு யாருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்க முடியும்! கபில்தேவ் ஆட்டமிழக்காமல் எடுத்த 175 ரன்கள்  என்ற சாதனை ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில்  மிக உயர்ந்த தனிமனித ஸ்கோராக  நீண்டகாலம் நிலைத்திருந்தது!  அதேபோல், சையத் ஹிர்மானியுடன்  9 ஆவது விக்கெட்டிற்கு எடுத்த 126 ரன்களும்  நீண்டகாலம் அதிகபட்ச ஸ்கோராக நிலைத்திருந்தது!

*********************************************************************************************

7

ஜிம்பாப்பேவுடனான ஆட்டத்தில் ஜிம்பாப்பேவின் ராவ்சனும், குரனும்
தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும்,
கபில்தேவின் அபார ஆட்டமும்
அவருக்கு துணையாக ரோஜர் பின்னி,
மதன்லால் மற்றும் சையத் கிர்மானி ஆடிய ஆட்டமும்
இந்தியாவை 266க்கு 8 விக்கெட் என்ற ஸ்கோரை எட்டவைத்தது.
கபில்தேவின் ஆட்டத்தால் மிரண்டு போனாலும்,
மூர்க்கம் நிறைந்த ஜிம்பாப்பே அணியினர்
ஒரேயடியாக அசந்துபோகவில்லை.  கபில்தேவின் ஆட்டம் அவர்களுக்கும் ஒரு ஆவேசத்தை
ஏற்படுத்தி  இருக்கவேண்டும்.
ஒருகை பார்த்துவிடுவோம் என்று துணிந்துவிட்டனர்.
துவக்க ஆட்டக்காரர்கள் பிரௌனும் பேட்டர்சனும்
நல்ல துவக்கத்தைக்கொடுத்தனர்.
நடுவில் ஹௌடன், அணித்தலைவர் ப்ளட்சர், குரன் புட்சர்ட்
எல்லாம் வெற்றிக்கு போராடினார்கள்.
பந்துவீச்சில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்திய குரன்
மட்டைவீச்சிலும் 73 ரன்கள் எடுத்து
இந்தியாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்.
ஆனால், ஜிம்பாப்பே கடுமையாக போராடியும்,
இந்தியாவின் 266 ரன்களை எட்டமுடியாமல்
31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று போனது.
மதன்லால் 3, ரோஜர் பின்னி 2, கபில்தேவ், சாந்து,
மொஹிந்தர் அமர்நாத் ஆகியோர்
தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தி,
வெற்றி தேவதையின் பார்வையை
இந்தியாவின் பக்கம் திருப்பினர்.
அந்த ஆட்டத்தில் கபில்தேவிற்கு அல்லாமல்
வேறு யாருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்க இயலும்!

ஜிம்பாப்பேவை வென்றதின் மூலம்
அளப்பரிய ஊக்கம் கொண்ட இந்தியா,
அடுத்த போட்டியில் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி
இந்தியாவை ஊதித்தள்ளியிருந்தபோதிலும்,
அதற்கு பதிலடி கொடுக்கும் வேகத்தில்
இந்தியா 2ஆவது மோதலுக்கு
அச்சமின்றி உற்சாகத்துடன் களம் இறங்கியது.
இந்தியர்கள் மனதளவில் அடைந்திருந்த உற்சாகம்,
ஊக்கம், தன்னம்பிக்கை, தைரியம், திறமை, ஆற்றல்
மற்றும் ஆவேசம் எல்லாம் சேர்ந்து அந்த ஆட்டம் முழுவதையும்
இந்தியாவின் ஆதிக்கத்தில் கொண்டு வந்தது.
டாஸில் வென்ற இந்தியா
மட்டவீச்சை முதலில் துவங்கியது.
எந்த வீரரும் ஓட்டமின்றி ஆட்டம் இழக்கவில்லை.
ஆஸியின் இயல்பான பந்துவீச்சில்
எவரும் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை
என்றபோதிலும், ஸ்ரீகாந்த் 24, மொஹிந்தர் அமர்நாத் 13,
யெஸ்பால் சர்மா 40, சந்தீப் பட்டேல் 30, கபில்தேவ் 28,
கீர்த்தி ஆசாத் 15, ரோஜர் பின்னி 21, மதன்லால் 12,
சையத் ஹிர்மானி 10 என இயன்றளவிற்கு
எல்லோரும் ஓட்டங்களைச்சேர்த்ததால்,
இந்தியா 247 ஓட்டங்களை எட்டியது.
ஆஸி தரப்பில் ஹாக் 3, தாம்சன் 3, லாசன்,
ஹோகன், மேக்லே தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியாவின் 247 ரன்களை துரத்திச் சென்ற ஆஸி அணியினர்
இந்தியாவின் அபார பந்துவீச்சில்
38.2 ஓவர்களில் 129 ரன்களுக்கு சுருண்டு போனதால்,
இந்தியா 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று,
அரை இறுதி போட்டிக்குள் அளப்பரிய உற்சாகத்துடன் நுழைந்தது.

அதில் மதன்லாலும், ரோஜர் பின்னியும் தலா 4 விக்கெட்டுகளையும்
சாந்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
21 ரன்கள் எடுத்து, 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திய
ரோஜர் பின்னி ஆட்ட நாயகன் ஆனார்.

*********************************************************************************************

8

பி பிரிவு நாக் அவுட் போட்டிகளில் மே.இ.தீவுகள் அணி
6 போட்டிகளில் 5ல் வென்று 20 புள்ளிகளைப்பெற்று
முதல் இடத்தை பிடிக்க,
இந்தியா 6 போட்டிகளில்  4 போட்டிகளில் வென்று
16 புள்ளிகளைப்பெற்று 2ஆவது இடத்தைப்பெற்றது.
ஏ பிரிவு நாக் அவுட் போட்டிகளில் இங்கிலாந்து
6 போட்டிகளில் 5ல் வென்று 20 புள்ளிகளைப்பெற்று
முதல் இடத்தை பிடிக்க,
பாகிஸ்தான் 6 போட்டிகளில்  3 போட்டிகளில் வென்று
12 புள்ளிகளைப்பெற,
அதே போல் நியூசிலாந்தும்
6 போட்டிகளில்  3 போட்டிகளில் வென்று
12 புள்ளிகளைப்பெற,
ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் 2ஆம் இடத்தை பிடித்து
அரை இறுதிக்குள் நுழைந்தது.
ஏ பிரிவு போட்டிகளில் முதல் இடம் பிடித்த இங்கிலாந்தும்,
பி பிரிவு  போட்டிகளில் 2ஆம் பிடித்த இந்தியாவும்
முதல் அரை இறுதியில் மோத,
பி பிரிவு போட்டிகளில் முதல் இடம் பிடித்த மே.இ.தீவுகள் அணியும்,
ஏ பிரிவு  போட்டிகளில் 2ஆம் பிடித்த பாகிஸ்தானும்
2ஆம் அரை இறுதியில் மோதின.

முதல் அரை இறுதியில் இந்தியா எதிர்கொண்ட
இங்கிலாந்து அணி சாதாரண அணி அல்ல.
2ஆவது உலகப்போட்டியில் ரன்னர் அணி அதுதான்.
ஆ பிரிவு நாக் அவுட் போட்டிகள் 6ல்
5ல் வெற்றி பெற்ற பலம்  வாய்ந்த அணி.

இங்கிலாந்து மட்டை வீச்சை எடுத்துக்கொண்டால்,
ஆலன் லாம்ப் நியுஸிலாந்துடனான முதல் போட்டியில் 102 ரன்களும், டேவிட்கோலர் ஸ்ரீலங்காவுடனான 2ஆவது போட்டியில் 130 ரன்களும், நியுஸிலாந்துடனான 4ஆவது போட்டியில் 92 ரன்களும்,
கிராம் பௌலர் பாகிஸ்தானுடனான 3ஆவது போட்டியில் 78 ரன்களும், பாகிஸ்தானுடனான 5ஆவது போட்டியில் 69 ரன்களும்,
ஸ்ரீலங்காவுடனான 6 ஆவது போட்டியில் 81 ரன்களும் எடுத்துள்ளது
இங்கிலாந்தின் மட்டை வீச்சு திறனை
பறை சாற்றக்கூடியதாக இருந்தன.
6 போட்டிகளில் 2 போட்டிகளில்
300 மேற்பட்ட ரன்களை எடுத்ததே
இங்கிலாந்தின் மட்டை வீச்சு திறனை எடுத்துக்காட்டக்கூடியதாகும்.
பாப் வில்லிஸ் நியுசிலாந்துடனான முதல் போட்டியில் 2 விக்கெட்டுகளையும், பாகிஸ்தானுடனான 3ஆவது போட்டியில் 2 விக்கெட்டுகளையும், நியுசிலாந்துடனான 4ஆவது போட்டியில் 4  விக்கெட்டுகளையும்,
விச் மார்க்ஸ் ஸ்ரீலங்காவுடனான 2ஆவது போட்டியில் 5 விக்கெட்டுகளையும், பாகிஸ்தானுடனான 5ஆவது போட்டியில்  2 விக்கெட்டுகளையும்,
பால் ஆல்லட்  ஸ்ரீலங்காவுடனான 6 ஆவது போட்டியில் 3 விக்கெட்டுகளையும் எடுத்தவை இங்கிலாந்தின் பந்துவீச்சு   திறனை எடுத்துக்காட்டக்கூடியதாகும்.

2ஆவது அரை இறுதியில் மே.இ.தீவுகள் அணியுடன் மோதிய
பாகிஸ்தான் அணியும் சாதாரணமான அணி அல்ல.
ஜாஹிர் அப்பாஸ் ஸ்ரீலங்காவுடனான முதல் போட்டியில் 82 ரன்களையும், இங்கிலாந்துடனான 3 ஆவது போட்டியில் 83 ரன்களையும்,
நியூஸிலாந்துடனான 6 ஆவது போட்டியில் 103 ரன்களையும்,
அப்துல் காதர் நியூஸிலாந்துடனான 2 ஆவது போட்டியில் 41 ரன்களையும்,
இம்ரான் கான் ஸ்ரீலங்காவுடனான 4ஆவது  போட்டியில் 102 ரன்களையும்,
ஜாவித் மியான்டட் இங்கிலாந்துடனான 5 ஆவது போட்டியில் 67 ரன்களையும் எடுத்தது பாகிஸ்தாம்னின் மட்டை வீச்சு திறனை எடுத்துக்காட்டக்கூடியதாகும். அதேபோல், சர்பராஸ் நவாஸ்

ஸ்ரீலங்காவுடனான முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளையும்,
அப்துல் காதர்  நியூஸிலாந்துடனான 2 ஆவது போட்டியில் 4 விக்கெட்டுகளையும், ஸ்ரீலங்காவுடனான 4ஆவது  போட்டியில் 5 விக்கெட்டுகளையும்
முடாசர் நஸர் இங்கிலாந்துடனான 5 ஆவது போட்டியில் 2 விக்கெட்டுகளையும், நியூஸிலாந்துடனான 6 ஆவது போட்டியில் 3 விக்கெட்டுகளையும்
எடுத்தது பாகிஸ்தானின் பந்து வீச்சு திறனை எடுத்துக்காட்டக்கூடியதாகும்.

*********************************************************************************************

9

முதல் அரை இறுதி போட்டி
இங்கிலாந்து இந்தியாவிற்கிடையே 22.06.1983ல்
மான்செஸ்டர் ஓல்டு டெர்ப்போர்டு மைதானத்தில் நடந்தது.
இங்கிலாந்து டாஸ் வென்று மட்டைவீச்சை தேர்ந்தெடுத்தது.
கிராம் பௌலரும், டேவாரும்
துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
இருவரும் நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.
69 ரன்களை எடுத்தபோதுதான் ரோஜர் பின்னி
முதல் விக்கெட்டாக டேவாரை சாய்த்தார்.
84 ரன்களாக இருந்தபோது கிராம் பௌலரையும் வீழ்த்தினார்.
அதன்பின் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக
குறிப்பிட்ட இடைவெளியில் வீழ்ந்துகொண்டே இருந்தன.
கபில் தேவ் 3, மொஹிந்தர் அமர்நாத் 2, கீர்த்தி ஆசாத் 1 என
அவர்கள் பங்கிற்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இங்கிலாந்து 213 ரன்களுக்கு 60 ஆவது ஓவர் முடிவில்
அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து அணியில் கிராம் பௌலர் 33, டேவார் 32,
டேவிட் ஹோவர் 17, ஆலன் லாம்ப் 29, மைக்கேல் கேட்டிங் 18,
டில்லி 20 ரன்களை எடுத்தனர்.
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்
இந்தியா மட்டை வீச்சை துவங்கியது.
துவக்க ஆட்டக்காரர்களாக சுனில் கவாஸ்கரும்,
ஸ்ரீகாந்தும் களம் இறங்கினர்.
நாக் அவுட் போட்டிகளில் சரியாக விளையாடாத சுனில் கவாஸ்கர்
அந்த ஆட்டத்தில் ஓரளவு தாக்கு பிடித்து விளையாடி 25 ரன்களை எடுத்தார்.
ஸ்ரீகாந்த் 19, மொஹிந்தர் அமர்நாத் 46, யெஸ்பால் சர்மா 61,
சந்தீப் பட்டேல் 51 எடுக்க இந்தியா பரபரப்பு இல்லாமல்
4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்து
6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று,
உலகக்கோப்பை வெற்றிக்கனியை தட்டி பறிக்கும்
இறுதிபோட்டிக்குள் எளிதாக நுழைந்தது.
நாக் அவுட் போட்டிகளில் அபாரமாக விளையாடிய இங்கிலாந்து
அரை இறுதி போட்டியில் மட்டை வீச்சு, பந்து வீச்சு இரண்டிலும்
தோல்வி அடைந்து பரிதாபமாக உலகக்கோப்பை கனவை
நிராசையாக மீண்டும் எடுத்துக்கொண்டு வெளியேறியது.
2 விக்கெட்டுகளும், 46 ரன்களும் எடுத்த
மொஹிந்தர் அமர்நாத் ஆட்ட நாயகனாக ஆனார்.

இரண்டாவது அரை இறுதி போட்டி 22.06.1983ல்
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.
மேற்கு இந்திய தீவுகள் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.
முதலில் மட்டை வீசிய பாகிஸ்தான்
60 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களே எடுத்தது.
மோசின் கான் மட்டும் 50 ரன்கள் கடந்து 70 ரன்கள் எடுத்தார்.
மால்கம் மார்சல் 3 விக்கெட்டுகள், ஆண்டி ராபர்ட்ஸ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்து மட்டை வீச்சை துவங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி
2 விக்கெட்டுகளைமட்டும் இழந்து 188 ரன்களை எடுத்து
8 விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
விவியன் ரிச்சர்ட்ஸ் 80 ரன்களும், லாரி கோம்ஸ் 50 ரன்களும் எடுத்தனர்.
மேற்கு இந்திய தீவுகள் அணி நாக் அவுட் ஆட்டங்களில்
முதல் போட்டியில் இந்தியாவுடன் தோற்ற பிறகு
தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்று
உலகக்கோப்பை நிச்சயமாக எங்களுக்குதான் என்று
மார்தட்டிக்கொண்டு  3ஆவது முறையாக மிகக்கம்பீரமாக
வீடு நடை போட்டுக்கொண்டு இறுதிபோட்டிக்குள் நுழைந்தது.

இந்திய அணி சில தோல்விகளும், பல வெற்றிகளும் பெற்று
ஓரளவு வலுவான அணியாக கருதப்பட்டாலும்,
உலகக்கோப்பையை வெல்லும் அணியாக
பெரும்பாலோர் கற்பனைகூட  செய்து பார்க்கவில்லை.
முதல் போட்டியில் அதிர்ஷ்டத்தால் இந்தியா
மேற்கு இந்திய தீவுகள் அணியை வென்றதாகவே கருதினார்கள்.
நாக் அவுட் ஆட்டங்களைத்தாண்டி
அரை இறுதியை எட்டிப்பார்க்க முடியுமா என்றுகூட
எண்ணிப்பார்க்காத இந்தியா
அரை இறுதியையும் தாண்டி இறுதி போட்டிக்குள்ளும் வந்துள்ளதே
மிகப்பெரிய சாதனையாக எண்ணி திழைத்தது.
பெற்ற வெற்றியே பெரும் சாதனை என்பதால்,
இனி தோற்பதற்கு எதுவுமில்லை -
தோற்றாலும் கவலை இல்லை என்ற பெருமிதத்தோடு
இந்தியாவும் இறுதிபோட்டிக்குள் நுழைந்தது.

**********************************************************************************************

10

25.06.1983ல் லண்டன் லாட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டி.
அந்நாள் இந்திய வரலாற்றில் பொன் எழுத்தால்
பெறித்து வைக்க வேண்டிய மகத்தான நாள்.
மேற்கு இந்திய தீவுகள் அணி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்துமா
அல்லது இந்திய அணி மாபெரும் சாம்பியனை வீழ்த்தி
புதிய வரலாறு படைக்குமா என்று
உலகமே பரபரப்பாக பார்த்துக்கொண்டிருந்தது.
இந்தியா டாஸை இழந்தது.
இருப்பினும் நம்பிக்கையையும், மன உறுதியையும் இழக்கவில்லை.
டாஸை வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி
இந்தியாவை முதலில் மட்டை வீச பணித்தது.
துவக்க ஆட்டக்காரர்களாக சுனில் கவாஸ்கரும், ஸ்ரீகாந்தும் களம் இறங்கினர். ஆரம்பமே இந்தியாவிற்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
2 ரன்களிலேயே  சுனில் கவாஸ்கர் ஆண்டி ராபர்ட்ஸ் பந்துவீச்சில்
டூஜானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து திரும்பினார்.
அதன் பிறகு ஸ்ரீகாந்தும், மொஹிந்தர் அமர்நாத்தும்
ஓரளவு தாக்கு பிடித்து நின்று ஆடினார்கள்.
மேற்கு இந்திய தீவுகள் அணியினரின் பந்துவீச்சு அபாரமாக இருந்ததால்,
இஃந்தியா ரன்களை எடுக்க மிகவும் போராடவேண்டியதாக இருந்தது.
இந்தியா எவ்வளவோ கஷ்டப்பட்டும்,
183 ரன்களைமட்டுமே எடுக்கமுடிந்தது.
ஸ்ரீகாந்த் 38, மொஹிந்தர் அமர்நாத் 26, யெஸ்பால் சர்மா 11,
சந்தீப் பட்டேல் 27, கபில்தேவ் 15, மதன்லால் 17,
கிர்மானி 14 மற்றும் சாந்து 11 ரன்கள் எடுத்தனர்.
ஆண்டி ராபர்ட்ஸ் 3, மால்கம் மார்சல், மைக்கேல் கோல்டிங்,
லாரி கோம்ஸ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
மேற்கு இந்திய தீவுகள் அணியில் இருந்த கார்டன் கிரீன்விச்,
டஸ்மென் ஹெயின்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், கிளைவ் லாய்டு,
லாரி கோம்ஸ் மற்றும் டூஜான் போன்ற
மட்டைவீச்சாளர்களின் திறனோடு ஒப்பிட்டு பார்த்தால்,
இந்தியா எடுத்த ரன்கள் எளிதாக ஊதித்தள்ளிவிடக்கூடியதுதான்.
அப்படித்தான் எண்ணி மேற்கு இந்திய தீவுகள் அணியினர்
ஹாட்ரிக் சாதனை என்ற கனவு கைகூடும் நேரம்
நெருங்கிவிட்டது என்று உற்சாகத்துடன் மட்டை வீச வந்தனர்.
ஆனால், மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஸ்கோர் 5 ரன்களாக இருந்தபோது,  கார்டன் கிரீன்விச்சை ஆட்டமிழக்கச்செய்து,
முதல் அடியை இறக்கினார் சாந்து.
இருப்பினும்,  மேற்கு இந்திய தீவுகள் அணி சுதாரித்து ஆடத்துவங்கியது.
டஸ்மென் ஹெயின்ஸும், விவியன் ரிச்சர்ட்ஸும் நிலைத்து ஆடத்துவங்கினர்.
மேற்கு இந்திய தீவுகள் அணி எடுக்க வேண்டிய ரன்கள்
கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வந்தது.
மேற்கு இந்திய தீவுகள் அணி வென்றுவிடும் என்ற
எதிர்பார்ப்பு எல்லோர் மனதிலும் மேலோங்கிவந்தது.
ஆனால், மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ரன்களை தொட்டபோது
டஸ்மென் ஹெயின்ஸை மதன்லால் வீழ்த்தினார்.
மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஸ்கோர் 57ஆக இருந்தபோது,
மதன்லால் வீசிய பந்தை விவியன் ரிச்சர்ட்ஸ் உயர தூக்கி விளாசி தள்ளினார். எல்லைக்கோட்டை நோக்கி பந்து பறந்துகொண்டிருந்தது.
கபில்தேவ் தொலைவில் இருந்து பந்தை பார்த்துக்கொண்டே
பின்பக்கமாகவே வெகுதூரம் ஓடினார்.
பந்து கைக்குள் வந்து விழும்வரை ஓடினார்.
அந்த ஓட்டம்  விவியன் ரிச்சர்ட்ஸைமட்டும் ஆட்டமிழக்கச்செய்யவில்லை.
மேற்கு இந்திய தீவுகள் அணியின் 3ஆவது உலககோப்பை கனவினையும்
ஆட்டங் காணச்செய்தது.
டஸ்மென் ஹெயின்ஸ் 13 ரன்களுக்கும்,
விவியன் ரிச்சர்ட்ஸ் 33 ரன்களுக்கும் ஆட்டமிழந்து விட்டனர்.
இன்னும் மேற்கு இந்திய தீவுகள் அணியில் கிளைவ் லாய்டு,
லாரி கோம்ஸ், பக்கஸ், டூஜான் மற்றும் மார்சல் என்று
நன்கு மட்டை வீசும் பல ஜாம்புவான்கள் இருந்தனர்.
ஆதலால், மேற்கு இந்திய தீவுகள் அணி கோப்பையை வெல்லும் என்ற கணிப்பிலேயே பெரும்பாலோர் காத்திருந்தனர்.
ஆனால், மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஸ்கோர் 66 ஆக இருந்தபோது, மதன்லால் பந்துவீச்சில் கவாஸ்கரிடம் கேட்ச் கொடுத்து லாரி கோம்ஸும்,
ரோஜர் பின்னி பந்துவீச்சில் கபில்தேவிடம் கேட்ச் கொடுத்து கிளை லாய்டும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
அதன்பிறகு பக்கஸும் சாந்து பந்துவீச்சில் சையத் கிர்மானியிடம்
கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
76 ரன்களுக்கு 6 விக்கெட் என்று மேற்கு இந்திய தீவுகள் அணி தடுமாறியது.
மேற்கு இந்திய தீவுகள் அணி கோப்பையை வெல்லும் என்ற
கணிப்பில் இருந்த பலரும்
எதிர்பார்ப்பு ஏமாற்றமாகிவிடுமோ என்று
முதல்முறையாக பதற்றம் அடைந்தனர்.

இந்தியா உலக கோப்பையை வெல்லும்
புதிய வரலாறு ஏற்பட்டுவிடுமோ என்று
உலக கிரிக்கெட் ரசிகர்கள் பரபரப்பு அடைந்தனர்.
ஆனால்,  மேற்கு இந்திய தீவுகள் அணியின் டூஜானும், மார்சலும்,
இக்கட்டான சூழ்நிலையிலும், மன உறுதியோடு
மேற்கு இந்திய தீவுகள் அணியின் போராட்ட குணத்தை வெளிப்படுத்தினர். அவர்களின் உறுதியான ஆட்டத்தில்
மேற்கு இந்திய தீவுகள் அணி 100 ரன்களை கடந்து,
மீண்டும் வெற்றிக்கான பயணத்தை தொடர்ந்தது.
உலகக்கோப்பை மேற்கு இந்திய தீவுகள் அணிக்கா
அல்லது இந்தியாவிற்கா என்று கணிக்கமுடியாத சூழலில்,
வெற்றி தேவதையின் தராசு நிலையாக நிற்காமல் ஊசலாடிக்கொண்டிருந்தது.
உலக கிரிக்கெட் ஆர்வலர்களின் இதயதுடிப்பு
பரபரப்பிலும், படபடப்பிலும் எகிறிக்கொண்டிருந்தது.
ஆனால், வெற்றி பயணத்தை நம்பிக்கையோடு தொடர்ந்து கொண்டிருந்த
டூஜான் மற்றும் மார்சலின் ஆட்டத்தை
மொஹிந்தர் அமர்நாத் முடித்து வைத்தார்.
டூஜான் 25 ரன்களுக்கும், மார்சல் 18 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர்.
மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஸ்கோர்
8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் என்று ஆனது.
இன்னும் இருந்தவர்களில் ஆண்டி ராபர்ட்ஸ்மட்டுமே
ஓரளவு ஆடக்கூடியவர்.
ஆனால், வெற்றிக்கு இன்னும் 60 ரன்கள் எடுக்கவேண்டியிருந்தது.
மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஆதரவாளர்களின் நம்பிக்கை முழுவதும்
ஆண்டி ராபர்ட்ஸ்மீது பிராத்தனையாக குவிந்து கிடந்தபோதிலும்,
அதற்கும் இந்திய அணியின் தலைவர் கபில்தேவ் அணைபோட்டார்.
ஆண்டி ராபர்ட்ஸ் கபில்தேவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதற்குமேல் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெறும் என்ற
நம்பிக்கை சுடர்விட வாய்ப்பு இல்லாமல் போனது.
உலகக்கோப்பை இந்தியாவின் கைகளில் விழுவது
உறுதியாகிக்கொண்டிருந்தது.
நடப்பது கனவா நனவா என்ற பிரமிப்பில் இந்தியா உறைந்துபோனது.
மைக்கேல் கோல்டிங்கை ஆட்டமிழக்கச்செய்த
மொஹிந்தர் அமர்நாத்தின் இறுதிபந்து
உலகக்கோப்பை இந்தியாவிற்குதான் என்பதை உறுதிசெய்தது.
உலகக்கோப்பை இந்தியாவிற்கா என்று உலகமே வியந்து போனது.
மொஹிந்தர் அமர்நாத்தும், மதன்லாலும் தலா 3 விக்கெட்டுகளையும்,
சாந்து 2 விக்கெட்டுகளையும், கபில் தேவ், ரோஜர் பின்னி
தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
மேற்கு இந்திய தீவுகள் அணியினர் 140 ரன்களுக்கு
அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து,
ஹாட்ரிக் சாதனை கனவை பறிகொடுத்தனர்.

மொஹிந்தர் அமர்நாத் இரண்டாவது முறையாக ஆட்ட நாயகனானார்.
காற்று வாங்கச்சென்று கவிதை வாங்கி வந்தது போல்,
மணக்கோலம் பார்க்கச்சென்று மணமகன் ஆனதுபோல்,
ஸ்லம்டாக் மில்லியனர் ஆனதுபோல்,
இந்தியா உலகக்கோப்பையை வென்றுவந்தது.
இந்தியா படைத்த புதிய வரலாற்றில் உலகமே உற்சாகமானது.
இந்தியர்களின் இதயங்களில் ஆனந்தம் அலை மோதியது.
இந்தியர்கள் ஆனந்த கூத்தாடினர்.
கபில்தேவின் கரங்களில் மின்னிய உலகக்கோப்பை
இந்தியாவின் மணிமகுடத்தில் ஒரு வைர கல்லாக ஜொலித்தது.
எண்ணிப்பார்க்காத வெற்றி!
நினைத்து பார்க்காத சாதனை!
இந்திய அணி சாதா அணியல்ல;
சாதனை அணிதான் என்பது அழுத்தமாக பதிவு செய்யப்பட்டது.

1983ல் இந்தியா பெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மட்டும் அல்ல.
இந்தியா சாதிக்கும்;
இந்தியா எதிலும் சாதிக்கும்;
இந்தியா எல்லாவிலும் சாதிக்கும் என்ற
நம்பிக்கையை, உறுதியை, ஊக்கத்தை, உற்சாகத்தை
இந்தியர்களின் உள்ளங்களில் காலாகாலத்திற்கும்
உயர்த்தி பிடிக்கும் என்று நம்புகிறேன்;
எத்தனை சோதனை வந்தாலும்,
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும்,
இந்தியா வெற்றி வாகை சூடும் என்ற நம்பிக்கையை, உறுதியை
இந்தியர்கள் எல்லோருக்கும் எப்போதும்
கொடுத்துக்கொண்டே இருக்கும் என்று  நம்புகிறேன்.
இந்த உறுதியான நம்பிக்கையோடு
1983ஆம் ஆண்டு உலக்கோப்பையை
இந்தியர்களின் நினைவுகளில்
பொன் எழுத்துகளால் கல்வெட்டாய்  பதிக்கிறேன்.

**********************************************************************************************

உலகக் கோப்பை 1983

1 25.06.1983!  இந்திய வரலாற்றில்  ஓர் இனிமையான நாள்!  அது நடந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது! ஆ னால், அதை இப்போது நினைத்தாலும்  ஆ...